Saturday, May 7, 2011

I have a dream ...

கவலைகள் இல்லா உறக்கம் - அதில்
இன்பங்கள் நிறைந்த கனவு
பசுமைகள் நிறைந்த நிலங்கள் - அதில்
சில்லென ஓடும் ஓடை
மரங்கள் நிறைந்த வனம் - அதில்
நிற்காதிசைக்கும் குயில்கள்
வேட்டை ஆடா புலிகள் - அதனால்
பயமின்றி உலவும் மான்கள்
மாசற்ற தென்றல் காற்று - அதில்
இனிமை நிறைந்த கீதம்
கைக்கெட்டும் உயரம் பழங்கள் - அதில்
தின்னத் தெவிட்டா சுவைகள்
பாய்ந்து சிதறும் அருவிகள் - அவை
பிறந்து வந்த முகடுகள்
அமைதியாக ஓடும் நதி - அதில்
பாய்ந்து நீந்தும் மீன்கள்
பனி படர்ந்த புல்வெளி - அதில்
மேய்கின்ற ஆடு மாடு
தேங்கி நிற்கும் தண்ணீர் - அதில்
குட்டியோடு குளிக்கும் யானை
தேவை யுத்தங்கள் அற்ற பூமி
மனிதர்கள் அற்ற தீவு - அதில்
தனிமையில் நான்

Conversation with God

கடவுள்

என் மீது என்னடா கோபம் உனக்கு?
சொல்லாமல் வாய் அடைத்து போனாய் எதற்கு?
கோபமா? தாபமா? வேகமா? சந்தேகமா?
நீ செய்த தவறுக்கு தண்டனை எனக்கு

மாற்றானோடு நீ பேசிச் சிரித்து குலாவுகையில்
என் மனம் பதைக்குதே என்னென்று நான் சொல்வேன்?
நாள் தோறும் குற்ற உணர்ச்சியிலே வெந்து நான் மடிகின்றேன்
இத்தண்டனயை எனக்களித்து
என்ன நீ கண்டாயோ சொல்?
-இது மனிதன்

சினம் கொண்டு சீறுவதும் மனிதப் பண்பே!
வாய் ஓயாமல் பேசுவதும் மனிதப் பண்பே!
கோபமும் தாபமும் மனிதப் பண்பே!
சந்தேகப் பேய் அதுவும் மனிதப் பண்பே!

உன்னை படைத்ததை தவறென்றாய் மனிதா!
படைக்கப் பட்டதின் சுகமறிவாயா?
வாழ்க்கையை தண்டனை என்றே சொன்ன நீ
அழகான ரோஜாவின் முள்ளறிவாயா?
மாற்றானோடு குலாவுகிறேன் என்ற நீ
இக்கரைக்கு அக்கரை பச்சை என்றறிவாயா?
குற்ற உணர்ச்சியிலே மடிகிறேன் என்ற நீ - அது
குற்றம் புரிந்தோரின் உடைமை என்றறிவாயா?
வாழ்கை ஒரு ரோஜா - அதை
இரசிக்கக் கற்றுகொள்.
புலம்பி என்னிடம் வந்து அழுது பயனில்லை
வாழ்கையிலே என்றும் நீ கடினமாய் உழைத்திட்டால் உன்
கடின உழைப்பினிலே பெரும் பகுதி நான் சுமப்பேன்
வாழ்கை ஒரு பஞ்சு மெத்தை
அதை சுகிக்க கற்றுக்கொள்.
அதில் துன்பங்கள் சிறு கற்கள்
அதை அகற்றக் கற்றுக்கொள்.


வாழ்க்கை ஒரு தென்றல்
அதை சுவாசிக்கக் கற்றுக்கொள்!
அதில் துன்பங்கள் சிறு தூசு
அதை சகிக்கக் கற்றுக்கொள்

வாழ்க்கையை வாழ்வதொரு பாடம் - அதை
வாழும் காலம் மட்டும் வழுவாமல் கற்றுக்கொள்

வாழ்க்கை ஒரு பாற்கடல் -அதன்
விடத்தை நீ சகித்தால்
அமுதமும் உனதுடைமை
இவ்வாறு வாழ்ந்து விட்டு
என்ன துன்பம் எனக்கூறு
துடைப்பதற்கு நான் உண்டு - துடைக்கப்
படுவதற்கு ஏதுண்டு?
- என்றார் கடவுள்

AS LONG AS YOU LIVE KEEP LEARNING HOW TO LIVE

My Early Attempts In Poem Writing

Like many of my friends and acquaintances, about a decade ago I used to write poems (or at least in my view) both in English and Tamil. I used to enjoy writing them and usually they reflect a theme that suddenly comes to mind causing an urge to write a poem on that theme.

I would be posting them in my blog starting from this one:

மின் வெட்டு
இயந்திர மயமான வாழ்க்கை
இயந்திரங்களான மனிதர்கள்
அன்புக்கு நேரமற்ற - ஆறு
அறிவுக்கு வேலையற்ற
அவலமான ஓட்டம் - இதில்
அறியாமல் வீழ்ந்துவிட்ட நாம்
வெளிவர என்ன வழி
யோசிக்க நேரமில்லை.

அன்று இரவு
அலுத்து சலித்து வீட்டை
அடைந்த அரை மணியில்
அழையா விருந்தாளியாய் வந்து
அடைந்தது மின் வெட்டு.

அலுத்த மனம் அலறியது - உள்ளே
அறைந்தது அரசாங்கத்தை - சபித்தது
மின் வாரியத்தை - நகர்ந்தது நேரம்
அமைதி அடைந்தது மனம்
பார்வை மாறியது:

எரியும் மெழுகு வர்த்தி
அதை சுற்றி வரும் விட்டில்
சுற்றி அமர்ந்திருக்கும் குடும்பத்தார்
சிறு நிறுத்தம் .... இயந்திர சுழற்சியில்
சிறு ஓய்வு ... இயந்திர மனிதனுக்கு
சிந்தனையில் தூங்கும் சிறு மனிதன் விழித்தான்
தொலைக்காட்சித் தொல்லை இல்லா
மடை திறந்த பேச்சு - தினமும்
அவசரமாய் உணவை அரைத்த மனிதனுக்கு
அவசரமற்ற உணவு
அசை போட பழங்கதை
இயற்கையின் சிறு தீண்டலையும்
இரக்கமின்றிப் பறித்து விட்ட
இயந்திரங்களை விட்டு மொட்டை
மாடியில் நித்திரை
எண்ணற்ற வின் மீன்
நடு நாயகமாய் நிலவு
சில்லென்ற தென்றல்
ஓடும் மேகங்கள்
ஓலைகளின் ஓசை
தூரத்து இடி முழக்கம்
இரசித்த படி உறக்கம்.

இது போல மேலும் தேவை
இன்னும் சில மின் வெட்டு - மனித
இயந்திரத்தை மனிதனாக்க.